அதிகை அற்புதங்கள் - அதிகையில் அற்புத மகான் - சுப்பிரமணிய தேசிகர்

தமிழ்நாடு முழுவதும் உள்ள சித்தர்கள் ஜீவசமாதிகளை நோக்கி நமது பயணம் தொடங்கி விட்டது 🙏 

நமது முதல் பயணமாக கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள திருவதிகை வீரட்டானேஸ்வரர் திருக்கோயில் பின்புறம் அமைந்துள்ள ஸ்ரீலஸ்ரீ சுப்பிரமணிய தேசிகர் ஆலயத்திற்கு சென்று அங்கு உள்ள சிறப்புகள் பற்றிய தொகுப்புகள் காணலாம் 🙏
                  திரு வீரட்டநாதர் துதி

 அரியானை அடிதூக்கு ஆடினானை அப்பருக்கு சூலைநோய் அகற்றிட்டானை தெரியாமல் முன்தொடர்ந்து தொழுதனா சுந்தரருக்கு திருவடியை சூட்டினானை கரியானை அம்பாக்கி கனகமேரு கல்லினை வில்லாக்கி கடிகியோடி திரிவார்தம் திரிபுரத்தை சிரித்தெரித்த திருஅதிகை பெருமானை சிந்தை செய்வோம்!

                பெரிய புராணம் 

திருவாளன் திருநீறு திலகவதியார் அளிப்பப் பெரு வாழ்வு வந்ததென பெருந்தகையார் பணிந்தேற்றங்கு உருஆர அணிந்து தமக்கு உற்ற இடத்து உய்யும் நெறி தருவாராய்த் தன்முன்பு வந்தார் பின் தாம் வந்தார்.

              திருநாவுக்கரசர் துதி

 இடையறாப் பேரன்பும் மழைவாரும் இணைவிழியும் உழவாரத்தின் படையறாத் திருக்கரமும் சிவபெருமான் திருவடிக்கே பதித்த நெஞ்சும் நடையறாப் பெருந்துறவும் வாகீசப் பெருந்தகைதன் ஞானப் பாடல் தொடையறாச் செவ்வாயும் சிவவேடப் பொலிவழகும் துதித்து வாழ்வாம்!

                     - தவத்திரு. சிவஞான முனிவர்


அதிகையில் அற்புத மகான் ஸ்ரீலஸ்ரீ சுப்பிரமணிய தேசிக சுவாமிகள்

இறைவனுக்கு அர்பணிக்கப்படுவது எதுவாயினும் அது பிரசாதம் என்று புனிதத்தன்மை கொண்டதாக ஆகிவிடுகின்றது. அது மலராக இருக்கலாம், விபூதி, மஞ்சள், குங்குமமாக இருக்கலாம். நாம் உண்ணக்கூடிய உணவாகவும் இருக்கலாம். எதுவாயினும் இறைவனுக்கு அர்பணிக்கப்பட்ட பிறகு அது இறைவனின் அருள் கூடிய பிரசாதமாக நமக்கு கிடைத்து, நம்முடைய தோஷங்களை எல்லாம் இல்லாமல் போகச் செய்கிறது. நமது உடலையும், உள்ளத்தையும் புனிதப்படுத்துகின்றது.

இறைவன், நாம் அர்பணிக்கக்கூடியவற்றை பிரசாதமாகப் பெறுவதை போலவே இறைவன் தானே நம்மிடத்தில் கருணை கொண்டவராக நமக்கு அளித்த பல வரப்பிரசாதங்கள் தான் இந்த புண்ணிய பூமியும் அதில் தோன்றிய ஞானிகளும், மகான்களும், அருளாளர்களும் ஆவார்கள்.

அத்தகைய மகான்கள் தான் கீழ்த்திசைக் கதிரவன் போன்று உலகத்துக்கே ஞான ஒளியை வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். இறைவனின் கருணையினால் தோன்றிய இந்த மகான்கள்தான் நம்மை ஆட்கொண்டு நம்முடைய இகபர சுகங்களை நமக்கு வழங்கக் கூடியவர்களாக திகழ்கிறார்கள். இவர்களே நமக்கு குருமார்கள், அவர்களிடம் நம்மை ஒப்படைத்துவிட்டால் பிறகு நாம் எதற்குமே கவலைப்பட தேவையில்லை. அனைத்தையும் அவர்களே பார்த்துக்கொள்வார்கள். அப்படி ஒரு மகானிடம் நம்மை ஒப்படைத்துவிட்டால் பிறகு நாம் எதற்குமே கவலைப்பட தேவையில்லை. அனைத்தையும் அவர்களே பார்த்துக்கொள்வார்கள். அப்படி ஒரு

மகானிடம் நம்மை ஒப்புக்கொடுத்துவிட்ட பிறகு எது நடந்தாலும் அது நம்முடைய நன்மைக்கே என்று அமைதியாக இருக்கவேண்டும். அதற்கு மிக, மிக அவசியமாக தேவைப்படுவது என்ன தெரியுமா?

இரண்டே இரண்டு முக்கிய குணங்கள்தான். அந்த இரண்டு குணங்களில் ஒன்று, உறுதியான நம்பிக்கை மற்றொன்று அசாத்திய பொறுமை. எவருக்கும் எக்காலத்திற்கும் பொருந்தக்கூடிய தாரக மந்திரங்களான அந்த இரண்டு வார்த்தைகளை நமக்கு அருளிய அந்த மகான் வேறு யாருமல்ல, அன்புடனும் பக்தியுடனும் பூஜிக்கப் பெற்றவரான ஸ்ரீலஸ்ரீ சுப்பிரமணிய தேசிக சுவாமியே அந்த ஒப்பற்ற மகான் ஆவார்.

சித்தர்கள் உலவும் இடங்களுக்குச் செல்வது, சித்தர் ஜீவ அதிஷ்டானத்தை தரிசிப்பது, சித்தர் நினைவுகளில் முழுகுவது ஒரு தனிசுகம். இச்சுகத்தை அனுபவிப்பதே ஒரு பிறவியின் பயன். பிறர் சொல்லி புரிந்து கொள்ளவும் முடியாது. பிறர்க்கு நாம் சொல்லி புரிய வைக்கவும் முடியாது.

அகண்டு விரிந்திருக்கும் பிரபஞ்சத்தின் அற்புதங்கள் எத்தனை எத்தனையோ! இறைவன் திருவிளையாடல் புரிந்தது பலபல, அவற்றுள் ஒன்று தென்கங்கை என்று போற்றக்கூடிய திருநாராயணபுரம், அதிகாபுரி, திருஅதிகை என்று அழைக்கப்படும் திருத்தலமாகும்.

இத்திருத்தலத்தில் உறைந்திருக்கும் இறைவன் கங்காதரன், வீரட்டநாதர், வீரட்டானம், திரிபுராந்தகர் போன்ற திருப்பெயர்களைக் கொண்ட இந்த திருஅதிகைநாதர் கோவிலை அலகிட்டு, மெழுகிட்டு, பூமாலை தொடுத்து தொண்டு செய்து வந்தவர் திலகவதி அம்மையார் ஆவார். இவரது தம்பியாகிய திருநாவுக்கரசர் திருஅதிகை நாதரின் அருள் பெற்று சூலை நோய் நீக்கப்பட்டு அருள்ஞானம் பெற்றதும்முதல் தேவாரப்பதிகம் பாடப்பெற்றதும், உழவாரம் செய்யப் பெற்றதும் இவ்வாலயத்தின் சிறப்பாகும்.

.                                       ஸ்ரீலஸ்ரீ சுப்பிரமணிய தேசிகர்

திருநாவுக்கரசரின் அருட்பெருமைகளை எல்லாம் கேள்வியுற்று அவர்மேல் பக்தியுற்ற சுப்பிரமணிய தேசிகர் அவரை மானசீக குருவாக ஏற்று, அவர் அருள் பெற்று விளங்கிய திருஅதிகை நாதனை தரிசிப்பதற்காக இராமேஸ்வரம், திருநெல்வேலி போன்ற பல சேத்திரங்களை தரிசித்த வண்ணமாக திருஅதிகை வந்தடைந்தார்.

இப்பூலகில் எத்தனையோ வானுயர்ந்து நிற்கும் கோபுரங்களையெல்லாம் கண்டு தரிசித்த சுப்பிரமணிய தேசிகர் அதிகை நாதனின் வானுயர்ந்து நிற்கும் கோபுரத்தை கண்ட மாத்திரத்தில் தலைக்கு மேல் கை தூக்கி வணங்கி சிரந்தாழ்த்தி சாஸ்டாங்கமாக கீழே விழுந்து வணங்கினார். ஆனந்த கண்ணீரில் நனைந்தார். இறைவனின் இறைவனின் பேரின்ப நிலையில் இருக்கின்ற சுப்பிரமணிய தேசிகருக்கு இத்தலத்தின் இறைவன் ரிஷப வாகனத்தில் காட்சி அளித்தார்.

திருநாவுக்கரசருக்கு அருளிய காட்சியை தனக்கு தந்தருளிய அதிகைநாதனின் பெருங்கருணையை நினைத்து சுப்பிரமணிய தேசிகர் பேரின்பத்தில் திளைத்தார். நாவுக்கரசர் உழவாரம் செய்து அருள்பெற்ற இத் திருக்கோயிலில் தானும் திருப்பணிச் செய்ய வேண்டும் என்று தீர்மானம் கொண்டார்.

இவ் வேளையில் கோயில் மணி ஓசை ஒலிக்க இவ்வோசையினையே ஆணையாக ஏற்றுக் கொண்டு திருஅதிகையில் தங்கி மேற்கு மாட வீதியில் குடில் அமைத்து யோக நிஷ்டையில் அமர்ந்து அஷ்டமா சித்தி மற்றும் நவதண்டயோகம் ஆகியவற்றை இறைவன் அருளால் கைவல்யம் பெற்று கோயில் திருப்பணிகள் செய்து வந்தார்.

மேலும், உலகிற்கெல்லாம் அரணாக விளங்கிய அதிகைநாதனின் கோயில் திருமதில்கள் கட்டும் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். இத் திருப்பணிகளையெல்லாம் செய்து கொண்டிருந்த பணியாளர்களுக்கு தினமும் ஊதியமாக வில்வ இலை, கொன்றை இலை ஆகியவற்றை பறித்து வழங்கினார். அவரவர் செய்கின்ற உழைப்பிற்கு ஏற்ப அவ்விலைகள் தங்க நாணயமாக மாறியதைக் கண்டு பணியாளர்கள் உற்சாகமடைந்து அதிசயத்தார்கள். இப்புகழ் உலகெங்கும் பரவியது. கோயில் மதில் சுவர் பணிகள் விரைவாக நடைபெற்றுக் கொண்டிருந்த தருணத்தில் திருவாவடுதுறை ஆதின கட்டளை தம்பிரானக விளங்கிய சிவஞான தம்பிரான் சுவாமிகள் திருஅதிகை வந்தடைந்தார். அவரும் இவ்வாலயத்தின் கோயில் திருபணிகளையெல்லாம் கண்டு வியந்து இந்த செயல்களை எல்லாம் செய்கின்றவர் யார்? என்று வினவினார்.

அங்கு வேலை செய்கின்ற சிற்பி ஒருவர் இத் திருப்பணிகள் எல்லாம் சுப்பிரமணிய தேசிகர் என்ற மகான் செய்து வருகின்றார் என்று கூறினார். அது மட்டுமல்லாமல் சுப்பிரமணிய தேசிகர் அவர்களுக்கு இறைவன் காட்சி அருளியதும், அவர் ஊதியமாக வழங்கிய இலைகள் தங்கமாக மாறியதையும், பல அற்புதங்களை நிகழ்த்தி கொண்டிருப்பதைப் பற்றியும், தம்பிரான் சுவாமிகளிடம் கூறினார். இவைகளை கேட்டு அறிந்த சிவஞான தம்பிரான் தன்னை மறந்து, தன் நிலையை மறந்து தேசிகர் நினைவில் ஆழ்ந்தார். அங்கு வேலை செய்கின்ற உளியின் ஓசை தம்பிரான் சுவாமிகளின் காதுகளில் நீங்கா வண்ணமாக ஒலிக்க, மீண்டும் தன் நினைவிற்கு வந்தார்.

சிவஞான தம்பிரான் சுவாமிகள் சிற்பியிடம் மகானை தரிசிக்க வேண்டும், அவர் எங்குள்ளார் என்று கேட்க, அங்கு பணிபுரிகின்ற சிற்பிகள் ஒன்று கூடி நீங்கள் யார்? என்று வினவினார். அவர், தான் சிவஞான தம்பிரான் என்றும் திருவாவடுதுறை ஆதினகட்டளை தம்பிரான் என்றும் கூறினார். மேலும் ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகரை தான் கண்ணார காண வேண்டும் என்றும் கூறினார். இதனை கேட்டறிந்த சிற்பி ஒருவர், மகான் அவர்கள் மேற்கு மாட வீதியில் குடில் அமைத்து அருள் செய்து வருகின்றார் என்று கூறினார். மேற்கு மாட வீதிக்கு செல்வதற்காக தம்பிரான் சுவாமிகள் புறப்பட்டார். அவரைத் தொடர்ந்து சிற்பிகள் அனைவரும் ஒன்று கூடி அவர் பின்னே சென்றனர். மகான் சுப்பிரமணிய தேசிகரை கண்டவுடனே சிவஞான தம்பிரான் சுவாமிகள் அவர் திருப்பாதங்களில் வீழ்ந்து வணங்கி, தன்னை அவரின் சீடனாக ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டினார். இவையெல்லாம் திருஅதிகைநாதனின் திருவருள் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு சிவஞான தம்பிரான் சுவாமிகளை தனது சீடனாக ஏற்றுக் கொண்டார்.

மேலும் தம்பிரான் சுவாமிகள் மூலமாக இந்த ஆலயத்தின் இடது பக்கமாக இருந்து அம்மன் சன்னதியை வலது பக்கமாக மாற்றி அமைத்தார். இதற்கும் காரணம் உண்டு, என்னவென்றால் அலகிட்டு, மெழுகிட்டு தொண்டு செய்து வந்த திலகவதியாரின் அதிட்ானம் வலது பக்கமாக இருந்ததால் அதன்மேல் அம்பாள் சன்னதியை உருவாக்கினார் (இது செவிவழி செய்தி ஆகும்) மேலும் நூற்றுக்கால் மண்டபம், வசந்தகால மண்டபம், தீர்த்தவாரி மண்டபம், திருநீற்று மண்டபம், பிரம்ம உற்சவம், வசந்தகால உற்சவம், அப்பர் சுவாமி சதய பெருவிழா உற்சவம், மாணிக்கவாசகர் உற்சவம் இவையெல்லாம் இத்திருக்கோயிலில் நடைபெற வேண்டுமென்று தீர்மானித்து தம்பிரான் சுவாமிகளிடம் தேசிகர் தெரிவித்தார்.

தம்பிரான் சுவாமிகள் எல்.ஆர்.பாளையத்தைச் சேர்ந்த சிவபக்தரும், செல்வந்தருமாகிய சொள்ளை சபாபதி செட்டியார் மூலமாக மண்டபங்கள், உற்சவங்கள், தேர் மற்றும் தேர் திருவிழாக்கள் (வைகாசி சுவாதி) நடைபெற வழிவகைச் செய்தார்.

காலக் கணக்கை கருத்தில் கொண்டு தனது சீடனாக விளங்கிய தம்பிரான் சுவாமிகளிடம் வருகின்ற ஆனி மாதத்தில் விசாக நட்சத்திரத்தில் நாம் இவ்விடத்தில் இருந்தபடியே சத்சித் சொருபமாகிய அண்டசராசரத்தில் அறனாக விளங்கிய அதிகைநாதனின் திருவுள்ளத்தில் இரண்டறக் கலக்க போகின்றோம் என்று கூறினார். இதனைக் கேள்வியுற்ற தம்பிரான் சுவாமிகள் தேசிகரின் திருவடிகளில் விழுந்து வணங்கி மிகவும் வருந்தினார். துறவரத்தில் இருப்பவர்கள் வருந்தக்கூடாது என்று தேசிகர் தம்பிரான் சுவாமிகளை தெளிவுபடுத்தினார். குடிலுக்கு அருகாமையிலேயே ஆலயம் அமைத்தார். குருவின் குருவாக்கின்படி ஆனிமாதம் விசாக நட்சத்திரத்தில் ஸ்ரீலஸ்ரீ சுப்பிரமணிய தேசிகர் சத்சித்ஜோதி சொரூபமாக விளங்கிய அதிகைநாதனிடம் இரண்டறக் கலந்தார். தம்பிரான் சுவாமிகள் அவ் அதிட்டானத்தில் சிவலிங்கத் திருமேனி பிரதிஷ்டை செய்து குடமுழுக்கு செய்தருளினார்.

2012 ம் வருடம் கும்பாபிஷேகம் நடைபெற்ற காட்சி ( பழைய புகைப்படம்)














மேலும் பல்வேறு ஆன்மிகம் தொடர்பான பதிவுகள் கீழே கொடுத்துள்ளேன் ;-





















Comments